காவேரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்னை மீட்ட தம்பதியினர்
காவேரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட தம்பதியினர்.
ஈரோடு கருங்கல் பாளையம் - பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி ஆறு பாலம் உள்ளது. இங்கு இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம். மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
சமீபகாலமாக காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
அந்தப்பெண் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக்கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தார் தனபால் (42), அவரது மனைவி வடிவரசி (36) ஆகியோர் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை தங்களது பரிசலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி (36)என்றும், இவரது கணவர் சங்கர் என்றும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக சுமதி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சுமதி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சுமதி கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமதியை காப்பாற்றிய தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu