ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கிகள் வேலை நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கிகள் வேலை நிறுத்தம்
X

வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ள வங்கி.

இரண்டு நாள் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.450 கோடி காசோலை பண பரிவர்த்தனை முடங்கியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் 2,600 -க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். வங்கிகளின் சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நாள் ஒன்றுக்கு நடக்கும் ரூ. 600 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கிகளில் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக தொடங்கியது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.1,200 கோடி பண பரிவர்த்தனை முடங்கி உள்ளது. இரண்டு நாள் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.450 கோடி காசோலை பண பரிவர்த்தனை முடங்கியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பழைய தனியார் வங்கிகளான கரூர் வைசியா பேங்க், பெடரல் பேங்க், தனலட்சுமி பேங்க் போன்ற வங்கிகளும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. ஆனால் அதே நேரம் மற்ற தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூலம் தினமும் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்த முடியாமல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்த வசூலான பணத்தை டாஸ்மாக் பணியாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தான் தினமும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நேற்று வசூலான பணத்தை டாஸ்மாக் பணியாளர்கள் வங்கியில் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் இன்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று வசூலாகும் பணத்தையும் அவர்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் அந்தந்த டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் வைத்துள்ளனர். இதனால் பணம் திருட்டு போய்விட கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!