ஈரோடு மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில்  10 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி

தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார மையங்கள், சிறப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.மேலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பெரும்பாலும் கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. இதுதவிர 14 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் மக்கள் தொகை 23லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 15 லட்சத்து 42 யிரத்து 281 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 85.25 சதவீதமாகும். இதைப்போல் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசியை இதுவரை 10 லட்சத்து 2 ஆயிரத்து 407 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 55.41 சதவீதமாகும். முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 25 லட்சத்து 44 ஆயிரத்து 688 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைப்போல் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தினமும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 23 லட்சத்து 67 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 15 வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்று 478 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story