ஈரோடு இடைத்தேர்தல்: பண பட்டுவாடாவை தடுக்க வங்கிகளுக்கு கட்டுப்பாடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தலைமையில் வங்கியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் நோக்கத்திற்காக வேட்பாளர்கள் வங்கி கணக்குகளை தொடங்கும் போது வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளால் அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கு செல்லும் போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் எடுத்துச் செல்லவும், பணியாளர்கள் அந்தந்த ஏஜென்சிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வதுடன் பணமதிப்பு விபரங்கள் அடங்கிய தொகுப்பினையும் தேர்தல் நடைமுறை விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ, பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்டிஜிஎஸ் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றாலோ, வேட்பாளர்கள் அல்லது அவர்களது மனைவி அல்லது அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகள் இருந்தாலோ, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதற்கான சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அனைத்து வங்கி அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 லட்சம் ரூபாய்க்க்கு மேலான பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் போது வருமான வரித்துறை, தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu