இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த முனியப்பன்.

பவானி அருகே உள்ள தாண்டவபுரத்தில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தாண்டவபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். விவசாய கூலித்தொழிலாளி. இவர் இன்று தனது வீட்டில் இருந்து தனது மகன் நல்லசிவத்துடன் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் பவானி நோக்கி சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து பவானி-மேட்டூர் சாலைக்கு வந்த போது தருமபுரியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் முனியப்பன் சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே உயிரிழந்தார்.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீசார் உயிரிழந்த முதியவர் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் காயமடைந்த மகன் நல்லசிவத்தை பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் பவானி டிஎஸ்பி தீபக் சிவாச் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து அரசு பேருந்தை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனர் சத்திவேல் என்பவரிடம் பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்