ஒவ்வொரு மாவட்டத்திலும் இ-ஆபிஸ் திட்டம்: அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-ஆபிஸ் மற்றும் இ-சேவைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தின் போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இ-ஆபிஸ் மற்றும் இ-சேவை தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:- தமிழக அரசின் திட்டங்கள் மக்களை தேடி செல்லும் வகையில் அனைத்து அரசு சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல் தகவல் தொழில்நுட்பதுறையில் கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளியை குறைத்து, இ சேவை மூலமாக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எளிதாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்தாண்டிற்குள் 300-க்கு மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த சேவைகளை மின்னணு உருவாக்கம் செய்து இ-சேவை மூலமாக வழங்க இருக்கின்றோம். இந்த இ-ஆபீஸ் மிகப்பெரிய பயனைத்தரும். எல்லா அலுவலகங்களையும் இ- ஆபீஸ் ஆக்குவதினால் பணிகள் எளிதாக்கப்படும்.
கோப்புகளை சேமித்து வைக்கவும் மேலும் கோப்புகளை கண்டறியும் வகையில் எளிமையான நடைமுறைகள் கொண்டு வரப்படும். இ- ஆபிஸ் மூலம் காகிதமில்லா சூழலை உருவாக்கி கோப்புகளை எளிதாக பராமரிக்க முடியும். இந்த காகித பயன்பாடு குறைப்பதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய செலவைக் குறைக்க முடியும்.
மேலும், சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் 3245 அரசு ஊழியர்களுக்கு இ-ஆபிஸ் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் மற்றும் கோட்ட அளவிலும், வட்டார அளவிலும், கிராம அளவிலும் இ-ஆபிஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குமரன், ஜெகதீஷ், முருகேசன், மின்னானாளுமை மேலாளர் சுரேந்திரன், கோகிலவாணி உட்பட வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu