அத்தாணி பேரூராட்சி: திமுக வேட்பாளர் திடீர் மரணம்
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த திமுக வேட்பாளர் ஐயப்பன்.
தமிழ்நாட்டில் வரும் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தாணி பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை கொண்டது.
இதனிடையே அத்தாணி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், அத்தாணி பேரூராட்சியில் 3ஆம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஐயப்பன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், வேட்பாளர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu