கள்ளக்குறிச்சி சம்பவம் சிபிஐ விசாரணை வேண்டும்: ஈரோட்டில் தேமுதிக வலியுறுத்தல்
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்ததையொட்டியும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே இன்று (25ம் தேதி) தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது சம்பந்தமாக ஒப்புக்கு விளக்கங்கள் அரசு தரக்கூடாது. இதை அரசு எச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விஷ சாராயம் சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் அனைவர் மீதும் அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கஞ்சா போதையில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பகுதி செயலாளர்கள் ஆறுமுகம், பெருமாள், செல்வகுமார், சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை கேப்டன் மன்ற துணை செயலாளர் சுல்தான் பாட்ஷா தொடங்கி வைத்து பேசினார். முடிவில் வட்ட செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu