ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு!

ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் அலுவலகம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 1) ஆய்வு மேற்கொண்டு கொண்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கும் முறை மற்றும் தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை அச்சிட்டு வழங்குவது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள மனுக்களின் தற்போதைய நிலையினை ஜி2ஜி என்ற இணையதளத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்டார். மேலும், நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னி உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை குறித்த மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், முதல்வரின் முகவரி இணையதளத்தில் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார். மேலும், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வன உரிமை சட்டம் மூலம் வழங்கப்பட்டு வரும் பட்டா மற்றும் இலவச தையல் இயந்திரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால், அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu