இளம் தொழில்முறை வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை வல்லுநர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட உள்ளது. இந்த அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணியிடத்திற்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டுமே) அல்லது கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடர்புடைய முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்படி பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன், தரவு பகுப்பாய்வில் தேர்ச்சி, தன்னிச்சையாகவும், குழுவுடனும் இணைந்து பணிபுரியும் செயல்திறன் ஆகிய தகுதிகளையும் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும்.
இப்பணியில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு மாதம் ரூ.50 ஆயிரம் (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. இப்பணிக்கான கல்வித் தகுதி, அனுபவம், விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்கள் https://erode.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான தங்கள் விண்ணப்பத்தினை சான்றிதழ்களின் ஒளிநகல்களுடன் adserd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது புள்ளி இயல் துணை இயக்குநர், மாவட்டப் புள்ளி இயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (6வது மாடி -பழைய கட்டிடம்), ஈரோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமோ வரும் மார்ச் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu