அந்தியூர் அருகே பர்கூர் கத்திரிமலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்து சென்ற ஈரோடு ஆட்சியா்!

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கத்திரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்து சென்றார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,060 மீட்டர் உயரத்தில் கத்திரிமலை மலை அமைந்துள்ளது.
இந்த மலை உச்சியில் மலையம்பட்டி, மாதம்பட்டி என இரு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 76 குடும்பத்தினர் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு செல்ல வேண்டும் என்றால் 2 வழிகள் உண்டு. அந்தியூரில் இருந்து பர்கூர், சோளகணை வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் காட்டுக்குள் பயணிக்க வேண்டும். அடர்ந்த காடு, 2 மலைகளை ஏறி இறங்கி செல்வதென்றால் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
அதே நேரம், சேலம் மாவட்டம் கொளத்தூர் வழியாக கத்திரிப்பட்டி கிராமத்துக்கு (சேலம் மாவட்ட எல்லை) சென்று அங்கிருந்து சென்றால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் கத்திரிமலை உச்சியை அடைந்து விடலாம்.
இருந்தாலும் கத்திரிப்பட்டியில் இருந்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் மழை இல்லாத காலங்களில் 5 கி.மீ தூரம் மட்டும் கரடுமுரடான மண் சாலையில் பிக்கப் வேன், ஜீப், சிறிய வகை டிராக்டரில் சென்று, பின் மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்தே செல்ல வேண்டும்.
இந்த நிலையில், கத்திரிமலையில் நேற்று முன்தினம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கலந்து கொள்வதற்காக கத்திரிபட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து கத்திரிமலை செல்ல டிராக்டரில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பயணம் செய்தார்.
பின்னர், உயரமான மலைக்கு மண் பெரிய பாறை, கற்கள் உள்ள வழித்தடத்தில் 3 கி.மீ தூரம் நடந்து சென்று பழங்குடியினர் குக்கிராமத்தில் கிராமத்தை அடைந்தார். இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மக்களின் நீண்ட கால குறைகளை கேட்டறிந்தார்.
வழக்கமாக இங்கு திட்டப்பணி பெரிய அளவிலான ஆய்வுக்கு மட்டும் துறை அதிகாரிகள், வனத்துறையினர் செல்லும் நிலையில், தற்போது, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட குழுவினர் மொத்தமாக சென்று மனுநீதி நாள் முகாமும் நடத்தி, மக்களின் நீண்ட கால கோரிக்கை, குறை கேட்டறிந்து இருப்பது பழங்குடியின மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu