ஈரோடு மாவட்டத்தில் வண்டல் மண், களி மண் இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 380 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து ஈரோடு மாவட்ட அரசிதழ்களில் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீர்நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வண்டல் மண் எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வண்டல் மண், களி மண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வட்டத்தின் அருகாமையில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து மண்எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் மண் வெட்டி எடுத்து தமது வயல்களை வளம் பெறச் செய்வதோடு, மண்பாண்டத் தொழிலாளர்களும் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் தங்களது நில ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் வருவாய் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ் நில ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியரால் வண்டல் மண் எடுக்க 30 நாட்களுக்கு மிகாமல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்.
விவசாய பயன்பாட்டிற்கென நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டருக்கு 185 கன மீட்டர் அளவிலும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் தயாரித்திட 60 கன மீட்டர் அளவிலும் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu