ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

பறவைக்காய்ச்சல் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி மற்றும் கர்நூல் பகுதியில் கோழி மற்றும் வாத்துகளில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவைக்காய்ச்சல் நோய் பறவை இனங்களை தாக்கும் இன்புளுயன்சா-ஏ என்ற வகையை சார்ந்த ஒரு வைரஸ் தொற்று நோய். இந்த நோய் Avian Influenza - Bird Flu என அழைக்கப்படுகிறது. பறவைக்காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகைகள் இருந்தாலும் எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது.
இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி நீர் பறவைகள் மற்றும் வனப்பறவைகள் ஆகியவற்றை முக்கியமாக தாக்கும். நோய் பாதித்த பண்ணைகளின் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித்தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு (Blo Security) முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள்:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 65 முட்டை கோழிப்பண்ணைகளில் 32.40 லட்சம் முட்டை கோழிகளும், 568 கறிக்கோழி பண்ணைகளில் 27.50 லட்சம் கறிக்கோழிகளும், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில் 2.30 லட்சம் நாட்டுக்கோழிகளும் உள்ளன.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், வாத்து பண்ணைகள் மற்றும் புறக்கடை கோழிகளில் எச்சம் மாதிரிகள், இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் நோய் தாக்கம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தினை தினமும் பார்வையிட்டு பறவைகளில் நோய் அறிகுறி தென்படுகிறதா எனவும் ஈரோடு கோழி நோய் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் (RRT-Rapid Response Team) அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பிரதிவாரம் திங்கட்கிழமை மாவட்ட அளவிலான பறவைக்காய்ச்சல் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறுகின்றது. அத்துடன் கோழிப்பண்ணையாளர்களுக்கு பறவைக்காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu