தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ மூலம் நடத்தப்படும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftsmanship Course In Food Production & Patisserie) ஆகிய படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். எனவே தகுதியுள்ள நபர்கள் இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யலாம்.
மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424-2259453 என்ற தொலைபேசி எண்ணில் வாயிலாகவோ அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu