ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களில் பின்னடைவு பணியிடங்கள் 51, அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் 6 மற்றும் இதர 82 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் தகுதிகள் அனைத்தும் அறிவிப்பு வெளியிடப்படும் 09.04.2025-ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு பழங்குடியினர் தவிர இதர அனைத்து பிரிவினருக்கும் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்கள் விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்படும். குறைவான பார்வைத் திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரிசெய்யப்பட்டது), உடல் இயக்கக் குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளில் முழு செயல்பாட்டுத் திறன், உணர் திறன் மற்றும் செயல் திறன் உள்ளடக்கியது) மற்றும் திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான) ஆகிய குறிப்பிட்ட உடல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இவ்வகையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த காலிப்பணியிடங்களில் 4 விழுக்காடு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நியமனம் கோரும் மையத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ள பள்ளி மையங்களின் விபரம், எண்ணிக்கை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனச்சுழற்சி விபரம் மற்றும் விண்ணப்ப படிவ மாதிரிகள் ஆகிய விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட மாட்டாது. விண்ணப்பங்களை erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்மந்தப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வரும் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சனிக்கிழமை உட்பட (அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மட்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்க தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்றும் விண்ணப்பங்கள் ஏதும் பெறப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தூரச்சான்று இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பதாரர் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.04.2025 மாலை 5.45 மணி
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மைய சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் மொத்தம் - 139
அதன் விபரம் ஈரோடு வட்டாரம் -23, மொடக்குறிச்சி வட்டாரம்- 10, கொடுமுடி வட்டாரம் -1, பெருந்துறை வட்டாரம் 9, சென்னிமலை வட்டாரம் -6, பவானி வட்டாரம் - 9, அம்மாபேட்டை வட்டாரம் - 7, அந்தியூர் வட்டாரம் 13, கோபிசெட்டிபாளையம் வட்டாரம் - 10, நம்பியூர் வட்டாரம் 11, தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம் -5, சத்தியமங்கலம் வட்டாரம் 13, பவானிசாகர் வட்டாரம் 5, தாளவாடி வட்டாரம் 6, ஈரோடு மாநகராட்சி 5, பவானி நகராட்சி - 2, கோபிசெட்டிபாளையம் நகராட்சி 3, சத்தியமங்கலம் நகராட்சி 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
எனவே, தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu