வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனம்
வாக்காளர் பிரச்சார வாகனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தபோது, எடுத்த படம்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் ஒளிப்பரப்பப்படவுள்ள பிரச்சார வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, ஈரோடு மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள் ஆகிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இத்தேர்தலில், வாக்களிப்பது தொடர்பாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்ப மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் மூலம், இன்று 05.02.2022 முதல் 18.02.2022 வரை ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதிகள் மற்றும் 42 பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்படுகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடியோ படக்காட்சிகளை பார்த்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகதீசன் , செல்வராஜ் (உள்ளாட்சி தேர்தல்), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்சி அமாலின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu