ஈரோடு மாவட்டத்தில் 1,720 தாய்மார்களுக்கு 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்
ஈரோடு எல்லப்பாளையம் அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடுடைய பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை அமைச்சர் முத்துசாமி வழங்கிய போது எடுத்த படம். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ஈரோடு எல்லப்பாளையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தில் 1,720 தாய்மார்களுக்கு ரூ.46.23 லட்சம் மதிப்பிலான 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (நவ.15) வெள்ளிக்கிழமை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு தமிழக முதல்வர் சட்டமன்ற விதி 110ன்படி பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தினை முதற்கட்டமாக 2002ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 433 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 572 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு, 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழக முதல்வரால் இன்று (நவ.15) தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 0-6 மாதம் வரையுள்ள தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 74,706 குழந்தைகளுக்கு அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார் .
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்டம் முழுவதிலும் உள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.46 லட்சத்து 23 ஆயிரத்து 266 மதிப்பீட்டிலான 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் நெய். புரோட்டின் பவுடர், பேரிச்சம் பழம், இரும்புச் சத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை உள்ளிட்ட ரூ.2 ஆயிரத்து 265 மதிப்பீட்டிலான பொருட்கள் அடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்) பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu