ஈரோடு மாவட்ட கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஈரோடு மாவட்ட கோவில்களில்  வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
X

கொரோனா கட்டுப்பாடுகளால், கோவில் வாசலில் நின்றவாரே தரிசனம் செய்த பக்தர்கள். 

கொரோனா பரவல் காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால், ஈரோடு மாவட்டத்தில் கோவில் முன்பு, பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று முதல், ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளன. பண்டிகை நாளில் கோயில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் கோயில்களில் அலைமோதியது.

இதன் காரணமாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

இதனால், சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில பக்தர்கள், கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதன் காரணமாக முக்கிய கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story