அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தனம் நிகழ்ச்சி: எருமை மாடு பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தனம் நிகழ்ச்சி: எருமை மாடு பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தனம் நிகழ்ச்சியில், எருமை மாடு பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடை பெற்று வந்தது.

இந்த நிலையில், கோவிலில் நேற்று அரக்கனை வதம் செய்யும் மகிஷாசுரமர்த்தனம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அந்தியூர்- பர்கூர் சாலையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் இருந்து குதிரையை அலங்கரித்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் சப்பரத்தை தோளில் சுமந்தபடி, மேளதாளம் முழங்க பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது வழிநெடுக பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.

அம்மன் ஊர்வலம் கோவில் குண்டம் பகுதிக்கு வந்தவுடன் அங்கு பக்தர் கள் காணிக்கையாக வழங்கிய எருமை மாடுகளுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து எருமை மாடு ஒன்று பலி கொடுக்கப்பட்டது.

அப்போது, அங்கிருந்த பக்தர்கள் அரக்கன் ஒழிந்தான் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பலி கொடுக்கப்பட்ட எருமை மாட்டை குழியில் போட்டு மூடி, அதன் மேல் நடு கல் நடப்பட்டு, மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன.

Next Story