ஆடி அமாவாசையை முன்னிட்டு ஈரோடு பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடினர்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவில் காசிக்கு இணையாக கருதப்படும் புண்ணிய ஸ்தலமாகும்.தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படக்கூடிய இத்திருத்தலத்தில் பவானி, காவேரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிப்பதால் இங்கு முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆடி ஒன்றாம் தேதி (தலை ஆடி) அன்று கூடுதுறையில் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டிருப்பதால் ஆடி அமாவாசையான இன்று புனித நீராடவும் திதி மற்றும் தர்ப்பணம் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு காய்கறிகளை படையலிட்டு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களும் உள்ளூர் மீனவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu