ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சஞ்சய் சம்பத் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்!
ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இன்று (ஜன.4) நடைபெற்றது. இதில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமையில், திருமகன் ஈவெராவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, முன்னாள் மாவட்டத்தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த தீர்மானம் இயற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் எனவும், ஈவிகேஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல தலைவர்கள் எச்.எம் ஜாஃபர் சாதிக், ராஜேஷ் ராஜப்பா, முகமது அர்ஷத், தினேஷ், ஜுபைர் அஹமத் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், இந்த தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu