ஈரோடு மாவட்டத்தில் இன்று பதிவான கிரைம் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று பதிவான  கிரைம் செய்திகள்
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டவர் பலி:- ஈரோடு மாவட்டம் அந்தியூர் தெப்பக்குளம் தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவருடைய மகன் லோகநாதன் (35). லோகநாதன் கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதால் தூக்கமின்மை காரணமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு வந்தவர் நேற்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாயார் சகுந்தலா அளித்த புகாரில் பேரில் அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது:- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பட்லூர் அருகே உள்ள கெம்மியம்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடையின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (47) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது:- ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள முக்குடிவேலம்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரை பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக மலையம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொன்னம்பாளையத்தை சேர்ந்த தங்கராசு (45), சோளசீராமணி குண்ணாம்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (38), ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (32), சாலைபுதூரை சேர்ந்த விஸ்வநாதன் (42), லக்காபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (23), சின்னியம்பாளையத்தை சேர்ந்த ஜெயகுமார் (24) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்கள் வைத்திருந்த 1,300 ரூபாய் ரொக்கம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

மது விற்ற இருவர் கைது:- ஈரோடு மாவட்டம் வெள்ளோடு - பெருந்துறை சாலையில் வெள்ளோடு ஆண்டிக்காட்டு பள்ளத்தில் சட்டவிரோதமாக சிறுவன்காட்டுவலசை சேர்ந்த செந்தில்குமார் (44) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளோடு போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், வெள்ளோடு பொறையாகவுண்டன்வலசு ரோடு பிரிவில் மது விற்பனையில் ஈடுபட்ட சென்னிமலை கே.ஜி.வலசை சேர்ந்த செல்வராஜ் (47) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது:- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள ஒற்றைபனைமரம் பேருந்து நிறுத்தத்தில் பவானிசாகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பவானிசாகர் சி.ஆர்.கேம்ப் பகுதியை சேர்ந்த வித்யாகுமார் (43) என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!