ஈராேடு கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு குறித்து விவசாயிகளுடன் கருத்து கேட்பு

ஈராேடு கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு குறித்து விவசாயிகளுடன் கருத்து கேட்பு
X

கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு குறித்து விவசாயிகளுடனான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை  அமைச்சர் சு.முத்துசாமி பெற்று கொண்டார்.

ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு குறித்து விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்பவானி திட்டத்தின் கீழ், வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டமானது, ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில்‌ நடைபெற்றது.

இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி வாய்க்கால் விவசாயத்திற்கு தண்ணீர் முழுமையாக பயன்படுகின்ற வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடைமடைக்கு தண்ணீர் போய் சேர வேண்டும். அதே நேரத்தில் அதற்கு முன்னால் இருக்கக் கூடிய விவசாய நிலங்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் வீணாக ஆற்றுக்கு செல்கின்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. அதேபோல் தண்ணீர் முழுவதும் கடைமடை வரை வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்படுகின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், வாய்க்கால் அடிப்பகுதியில் கான்கிரீட் போடும் பணி மேற்கொள்ள இருந்தது. தற்போது விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, கான்கீரீட் தளங்கள் அமைக்கக் கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாய்க்கால்களின் பக்கவாட்டு பகுதியில் முழுமையாக சேதமான இடங்களில் அமைந்துள்ள தடுப்புச் சுவர்கள் சீர் செய்யப்படவுள்ளது. கீழ்பவானி திட்டத்தினை பயன்படுத்துகின்ற விவசாயிகள் மற்றும் கடைமடையில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதே அரசின் நோக்கமாகும். தற்போது, வாய்க்காலை ஒட்டியுள்ள பழுதடைந்த பாலங்கள் சிறிய அளவில் இருப்பதால் அதனை பெரிது படுத்தி டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் விரிவுபடுத்திட விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெறுகின்ற விவசாயிகள் அனைவரும் முழுமையாக பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மேலும் கிணறுகளில் ஊற்று மூலம் தண்ணீர் பெறுகின்ற விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் இரு பிரிவாக வெவ்வேறு கருத்துகளுடன் உள்ளனர். ஒரு பக்கம் கான்கிரீட் அமைத்து கீழ் மடைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்றும், மறுபக்கம் கான்கிரீட் அமைப்பதால் மேல்மடையில் இருக்கின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், விவசாயிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை மேற்கொண்டு, தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்