அத்தாணியில் ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.28 லட்சம் வட்டி வசூல்: அதிமுக நிர்வாகி மீது புகார்

அத்தாணியில் ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.28 லட்சம் வட்டி வசூல்:  அதிமுக நிர்வாகி மீது புகார்
X

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த விவசாயி முத்துசாமி.

ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.28 லட்சம் கந்து வட்டி வசூலித்ததாக, அத்தாணி பேரூராட்சி அதிமுக அவை தலைவர் மீது விவசாயி ஒருவர் புகார் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 78). விவசாயி இவர் நேற்று அவரது மனைவி பாவாயியுடன் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தில் 5.32 ஏக்கர் விவசாய நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் குப்பாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அத்தியப்பனின் மகன் முருகேசன் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.7 லட்சம் பெற்றேன். அதற்கு வட்டிதொகைக்கு பதிலாக, நிலத்தை போக்கியத்திற்கு அனுபவித்து கொள்ளுமாறு தெரிவித்தேன். பிறகு, நான் அவர்களுக்கு வழங்கிய பத்திரத்தை வைத்து, பைனான்ஸ் தொழில் செய்து வரும் அத்தாணி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவரான குருசாமியின் மகன் அப்பு என்கிற சடையப்பன் என்பவர் என் அனுமதி மற்றும் எனது வாரிசுகளின் அனுமதியின்றி, அவரது மனைவி ஈஸ்வரி, மகன் விஸ்வநாதன், ஈரோடு சூரம்பட்டிவலசை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பூங்கொடி ஆகியோர் பெயர்களில் கிரையம் செய்தனர்.

இதையடுத்து அப்பு என்ற சடையப்பனிடம் பத்திரத்தை எனது பெயருக்கு மாற்றி தர கேட்டபோது, வாங்கிய பணத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.30 லட்சம் கொடுத்தால், பத்திரத்தை வழங்குவேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. மீறினால் என்னையும், எனது குடும்பத் தையும் அழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில், எனது இளைய மகன் மயில் என்ற மயில்சாமியிடம் நான் வாங்கிய ரூ.7 லட்சத்திற்கு, ரூ.30 லட்சம் கொடுத்தால் உங்களது நிலத்தை கிரையம் செய்து தருவதாக ஆசை கூறினார். இதை நம்பி எனது மகன் ரூ.28 லட்சம் கொடுத்ததின்பேரில், இடத்தை எங்களுக்கு கிரையம் செய்து கொடுத்தார். ரூ.28 லட்சம் வாங்கியதன் பேரில் கிரையம் செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்து, அப்பு என்ற சடையப்பனிடம் கேட்டபோது, வட்டிக்கு வட்டி பணம் வந்து விட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். எனவே, நான் வாங்கிய ரூ.7 லட்சம் கடன் தொகை மற்றும் அதற்கு உண்டான நியாயமான வட்டி போக மீத முள்ள தொகையை பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

Tags

Next Story