3 மாதத்திற்குள் மனு மீது தீர்வு காணாவிட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
பொதுமக்களிடம் மனுக்களை பெரும் கலெக்டர்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்கள் குறைகளை எழுதி மனுவாக கொடுத்து வருகிறார்கள். மனுக்களை பெறும் கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அப்போது அவர் அதிகாரிகளிடம், ஏற்கனவே பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டார். அதற்கு எந்த ஒரு அதிகாரியும் சரிவர பதில் கூறவில்லை.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளை எச்சரித்து பேசியதாவது:
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாத காலத்துக்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நிராகரிக்கப்பட்டது என்று பதில் கூறினால் அதற்கு தகுந்த காரணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவேண்டும். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் நன்கு விவரம் தெரிந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும். பொதுமக்கள் கொடுத்த 20 மனுக்களில் 15 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை அளவில் கூறாமல் உண்மையாகவே அந்த மனு மீது எடுக்கப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu