ஈரோட்டில் நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தை தொடங்கி வைத்த கலெக்டர்

ஈரோட்டில் நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தை  தொடங்கி வைத்த கலெக்டர்
X

நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்த போது எடுத்த படம்

வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த திருநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த "நகரும் புகைப்படக் கண்காட்சி" பேருந்தினை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு, நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்ட தலைவர்களைப் போற்றும் வகையிலும், குறிப்பாக, தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்களின் தியாகங்களை வருங்காலச் சந்ததியினரும் அறிந்துணர்ந்து பயன்பெறும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், சென்னை, கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய வளாகத்தில் 75வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அண்ணல் காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்று "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர், 75ஆம் ஆண்டு தின விழா உரையில், தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழ் அவர்களின் 150வது பிறந்த திருநாளை அரசு சார்பில் எழுச் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.


அந்த அறிவிப்பிற்கிணங்க, வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பொதிந்து கிடக்கும் அரிய நிகழ்வுகளை வெளிக்கொணரும் வகையில் -தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் பார்வையிட்டுப் பயன்பெறும் நோக்கில் போக்குவரத்துத் துறையின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள "நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இன்று ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறும்படங்களும் திரையிடப்படவுள்ளது. இப்பேருந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கும், வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ, மாணவியர்கள் அறிந்து பயனடையும் விதமாக வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்பட உள்ளது. மேலும் இந்த நகரும் புகைப்படக் கண்காட்சிப் பேருந்தானது, மாணவ-மாணவியர்களுக்கு தேசப்பற்றினையும் வரலாற்றினையும் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, எழுமாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளி, முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 16.02.2021 அன்றும், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுந்தபாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கவுந்தபாடி அரசு ஊராட்சி மாடல் மேல்நிலைப்பள்ளி, ஒன்றியத்திற்குட்பட்ட பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோபி நகரவை மகளிர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பங்களாப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 17.02.2022 அன்றும், டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 18.02.2022 அன்றும் செல்கிறது.எனவே, அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி, பள்ளி மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் இந்நகரும் புகைப்படக் கண்காட்சிப் பேருந்தினை பார்வையிட்டுப் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (பெருந்துறை) ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story