ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தில் 2,062 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தில் 2,062 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1,239 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் நேரலையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் நடைபெற்ற விழாவில் "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற திட்டத்தினை துவக்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.34 கோடி மானியத்தொகையினை வழங்கியுள்ளார்.
இத்திட்டத்தில் பயனாளிகள் அவர்களுக்கான கலைத் தொழிலில் ஐந்தாண்டு அனுபவமுள்ள 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ரூ.50 ஆயிரம் அதிகபட்சமாகக் கொண்ட 25 சதவீத மானியத்தோடு ரூ.3 லட்ச ரூபாய் கடனுதவியாகப் பெற இயலும். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 2,062 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1,239 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு 388 பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.1.76 கோடி மானியத்தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளது.
மேலும் 25 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைத்திறன் கலைஞர்கள், தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி பயன் பெறலாம். மேலும், இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சென்னிமலை ரோடு, ஈரோடு 638 001' என்ற அலுவலகத்தை அணுகிப் பயனடையலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், கைவினைக் கலைஞர்கள், பயனாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu