முதல்வர் ஸ்டாலின் வரும் 19ல் ஈரோடு வருகை: 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்

முதல்வர் ஸ்டாலின் வரும் 19ல் ஈரோடு வருகை: 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோட்டில் வரும் 20ம் தேதி நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள நிலையில், 19ம் தேதி மதியம் ஈரோடு வருகிறார்.

ஈரோட்டில் வரும் 20ம் தேதி நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள நிலையில், 19ம் தேதி மதியம் ஈரோடு வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற டிசம்பர் 19ம் தேதி, 20ம் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 19ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை வழியாக ஈரோட்டுக்கு வருகிறார்.

அங்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு அவர் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 5 மணி அளவில் மேட்டுக்கடை பகுதியில் தங்கம் மகாலில் நடக்கும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மாலை 6 மணி அளவில் திமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். இரவில் ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிக்கு திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம், நான்கு வழிச் சாலையாக விரிவு படுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு), ஈரோடு வைராபாளையத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் உரக்கிடங்கு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business