ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 8 புதிய அறிவிப்புகள்!
ஈரோடு சோலாரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.
ஈரோட்டில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில் வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சோலாரில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், விழா மேடையில் பேசிய அவர், ஈரோடு, இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம்! காரணம், தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண்! தந்தை பெரியார் அவர்கள் நமக்கு பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் கலைஞரையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை! இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை! நாமும் இல்லை!
சில நாட்களுக்கு முன்புதான், ‘ஈரோட்டு பூகம்பம்’ தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டிய, வைக்கம் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கேரளத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடினோம். கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து பாராட்டுகிறார்கள்.
இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான தந்தை பெரியார் அமைத்த அடித்தளம் தான் அதற்குக் காரணம். பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்த இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்; பூரிப்படைகிறேன்; புலங்காகித உணர்வோடு இங்கே நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
உங்களையெல்லாம் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தாலும், இந்த நேரத்தில் ஒரு சோகம் எனக்குள் இருந்து வேதனையை தந்து கொண்டுதான் இருக்கிறது! கடந்த வாரம் நம்முடைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த சோகம்தான் அது! தந்தைப் பெரியாரின் பேரன் அவர்.
மத்திய அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்மோடு இந்த மேடையில் இருந்திருந்தால் நம்முடைய திராவிட மாடல் அரசின், சாதனைகளை செயல்திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார். அவருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
இந்த விழாவின் மூலமாக ரூ.951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 559 புதிய திட்டங்கள் திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 222 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் அளவுக்கான நலத்திட்ட உதவிகள் 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. மொத்தமாக சொன்னால், ஆயிரத்து 368 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் விழாவாக, இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஈரோட்டின் நல்முத்து அமைச்சர். முத்துசாமி அவர்களை பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.
பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நினைத்த செயலை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டக் கூடியவர் நம்முடைய அருமை சகோதரர் முத்துசாமி அவர்கள். இந்த நிகழ்வை இவ்வளவு பிரம்மாண்டமாக நிகழ்த்திக் காட்டியிருக்கக்கூடிய அமைச்சருக்கும், அதேபோல் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மாவட்ட அரசு அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துகள்.
கடந்த மூன்றாண்டு காலத்தில், ஈரோடு மாவட்டத்திற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கும் பணிகளின் பட்டியல் மிக மிக நீளமானது. அவற்றில் சிலவற்றை மட்டும் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் தொடங்கி வைத்தோம்.
இதன்கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட நகர்ப் பகுதிகளில், 70 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் 4 ஆயிரத்து 191 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. நத்தம் நிலவரித்திட்டப் பணிகளுக்கான புதிய அரசாணையின்படி, 2 ஆயிரத்து 922 பட்டா வழங்கப்பட்டு, இன்னும் அந்தப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில், 400 மீட்டர் சிந்தெட்டிக் ஓடுதள பாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தந்தைப் பெரியார் மருத்துவமனையில், 80 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்தியூர், பர்கூர், தாளவாடி, தலமலை மற்றும் ஆசனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வசதிக்காக, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இப்போது 3 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 6 பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டை கணக்கில் கொண்டு தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில், 5 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு, தற்போது உழவர்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எட்டு புதிய சமுதாயக் கூடங்கள், புதிய மாவட்ட மைய நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி வட்டங்கள் மலைப்பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு, மலைவாழ் படி மற்றும் குளிர்காலப் படி வழங்க ஆணையிடப்பட்டிருக்கிறது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நம்பியூர் வட்டாரத்தில், ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம், கரட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு, விரைவில் அங்கு ஐ.டி. பார்க் அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, இன்று சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 22 கிராம ஊராட்சிகளில் இருக்கும் 434 ஊரக குடியிருப்புகளுக்கு, ரூ.482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஈரோடு மாநகராட்சி, சோலார் பகுதியில் காய்கறி மளிகை சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் போராட்ட மாவீரர்களை, மக்களுக்காக உழைத்த தியாகிகளை தொடர்ந்து போற்றி வரும் அரசு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. அதற்கு அடையாளமாகதான், தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்ட தியாகிகளின் திருவுருவச் சிலைகளும், நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டது.
அந்த வரிசையில், பவானிசாகரில் உத்தமர் தியாகி ஐயா ஈஸ்வரனுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன். அதேபோல், 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய, தீரன் சின்னமலையின் போர்ப்படையிலும், ஒற்றர் படையிலும் தளபதியாக பணிபுரிந்து, ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மாவீரன் பொல்லான். மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.1 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்க இன்றைக்கு நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
அடுத்து, நாட்டின் விடுதலைக்காக, தனது இன்னுயிரை ஈந்த தியாகி திருப்பூர் குமரன் நினைவைப் போற்றும் வகையில், சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு திறப்புவிழாவும் நடைபெறவிருக்கிறது. அதேபோல், இந்த ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தன்னுடைய அயராத முயற்சிகளால் பால் உற்பத்தியைப் பெருக்கி, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச்சிலை, ஈரோடு பால் பண்ணையில் நிறுவப்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கொடுமணல் தொல்லியல் களத்தின் வரலாற்றுச் சிறப்பை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்ல அருங்காட்சியகம் அமைக்க அறிவிக்கப்பட்டு, அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அந்த உறுதியோடு இன்றைய நிகழ்ச்சியின் வாயிலாக இன்னும் சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது, ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் ரூ.100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இரண்டாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரூ.15 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடமும், ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்திற்கு ரூ.8 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களும் கட்டப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராமங்கள், சென்னிமலை, சித்தோடு, நசியனூர், கே.சி.பாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல், சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம், ரூ.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
நான்காவது அறிவிப்பு - அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில், ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் குரங்கன்பாளையம் நீர்ப்பாசன அமைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் உழவர்களுக்கு பலனளிக்கும் வகையில், ரூ.15 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும்.
அடுத்து, ஆறாவது அறிவிப்பு - உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், ரூ.10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய 15 துணை சுகாதார நிலையங்களுக்கு, ரூ.6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
எட்டாவது அறிவிப்பு - பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் கோயில் பக்தர்களுக்கான வசதிகள், ரூ.10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும்.
இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும்! வெறும் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, கண்டுகொள்ளாமல் போகும் முந்தைய அரசு இல்லை இது. சொன்னதை செய்வோம் என்று செய்து காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடக்கும் உங்கள் ஸ்டாலினுடைய திராவிட மாடல் அரசு இது!
நேற்று, நான் ஈரோட்டிற்கு வந்தவுடன், இந்த மாவட்டத்தில், நடந்துகொண்டிருக்கக்கூடிய பணிகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ததோடு, மாவட்ட ஆட்சியருடன் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். அதுமட்டுமல்ல, இன்றைய நாளேடுகளை நீங்கள் பார்த்தால் தெரியும். முதல்வரின் கவனத்திற்கென்று சில பிரச்சனைகள் என்று தலைப்பிட்டு அதில் கட்டுரையாக எழுதியிருந்தார்கள்.
அதை தற்போது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி கவனிக்க சொல்லியிருக்கிறேன். இப்படி தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நம்முடைய அரசின் நலத்திட்டங்களால் பயனடையும் தகவல்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வாங்கி பார்த்தேன்.
அந்த தகவல் எனக்கு பெருமையாகவும், மலைப்பாகவும் உண்டாக்கியது. ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு செய்திருக்கிறோமா! நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பான திட்டங்களை, அவைகள் எல்லாம் முழுமையாக சொல்வதற்கு நேரமில்லை. டேட்டாவை மட்டும், சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பெண்களின் பொருளாதார விடுதலைக்காக நம்முடைய அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அந்தத் திட்டத்தில், இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 4 இலட்சத்து 90 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறார்கள்! அதேபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு சுவையான – சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தில், 46 ஆயிரத்து 355 மாணவர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள்! மாணவிகளின் உயர்கல்வி கனவுக்கு உறுதுணையாக இருக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்!
அதேபோல், மாணவர்களின் உயர்கல்விக்கு துணை நிற்கும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் மூலமாக இதுவரை 7 ஆயிரத்து 630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. நேற்று நான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், இரண்டு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினேன். அந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 762 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆயிரத்து 528 பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 78 ஆயிரத்து 235 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 484 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
அடுத்த பட்டியல், மாவட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மட்டும், இதுவரை 830 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 73 பாலங்கள் கட்டும் பணிகள், 201 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 71 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளும் நடைபெற்று வருகிறது.
75 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தினால்தான், மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu