மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
வழக்குப்பதிவு.
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மே 1ம் தேதி தொழிலாளா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் அந்த விதிகளை மீறி சில தொழில் நிறுவனங்கள் செயல்பட்டதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், தொழிலாளா்களுக்குக் கட்டாய சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாற்றினால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா, முன் அனுமதி பெற்று இயங்குகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வானது மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி. சத்தி ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 42 கடை நிறுவனங்கள், 54 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 100 நிறுவனங்களில் ஆய்வு நடந்தது.
இதில் 31 கடை நிறுவனங்கள், 46 உணவு நிறுவனங்கள் மற்றும் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 81 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu