ஈரோட்டில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கட்டிட மேற்பார்வையாளர் கைது
பிரியா மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் யோகநாதன்.
ஈரோடு அருகே உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர், லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் கடந்த 12-ம் தேதி ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதைத்தொடர்ந்து 13-ம் தேதி அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் கை, கால்கள் மடங்கிய நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவில் அந்த பெண் கழுத்தை மிதித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
மேலும் கொலையாளியை பிடிக்க ஈரோடு டவுன் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் (சூப்பர்வைசர்) யோகநாதன் ( 49) என்பவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருந்தது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும் அவருடைய செல்போனை போலீசார் வாங்கி அதை ஆய்வு செய்தனர். அப்போது யோகநாதனின் செல்போன் எண் கடந்த 9ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை அணைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு 15 நாட்களாக அவர் அடிக்கடி மற்றொரு எண்ணுக்கு பேசி இருந்ததும் தெரிய வந்தது.
பின்னர் போலீசார் அந்த எண்ணை ஆய்வு செய்தபோது அது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (39) என்பவருடைய செல்போன் எண் என்பதும், அந்த எண் கடந்த 11-ம் தேதியில் இருந்து அணைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் யோகநாதனிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், ஜெயலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:
எனக்கு, பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி என்னைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்னைவிட்டு பிரிந்து சென்றார். அதனால் நான் பெண் தேடி தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்தேன்.
இதன் காரணமாக அந்த தகவல் மையத்தில் இருந்து எனக்கு ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை அனுப்பினார்கள். அந்த பெண்ணை தொடர்பு கொண்டு நான் பேசினேன். பின்னர் நாங்கள் 2 பேரும் அடிக்கடி பேசிக்கொண்டோம். அப்போது அவர், தான் கோவையில் ஒரு முதியவரை பராமரித்து வரும் வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும், தனக்கு 3 பெண்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் என்னை நேரில் பார்த்து, பிடித்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் நான் அவரை பார்ப்பதற்காக கோவை காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அவரும் அங்கு வந்திருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு பிடிக்கவில்லை, இதனால் நான் அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தேன்.
அப்போது அவர், நான் வேலையை விட்டு வந்து விட்டேன். திரும்பி அங்கு செல்ல முடியாது. எனவே இன்று ஒருநாள் மட்டும் உங்களுடைய வீட்டில் தங்கி விட்டு மறுநாள் தனது சொந்த ஊருக்கு சென்றுவிடுவதாக கூறினார். இதனால் நான் அவரை கடந்த 8-ம் தேதி எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
ஆனால் அவர் கூறியபடி மறுநாள் அவருடைய வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் 10 பவுன் நகை கொடுக்கும்படியும் கூறினார். இல்லையென்றால் ஊரை கூட்டி என்னை கேவலப்படுத்தி விடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்துபோன நான் அவரை வீட்டில் தங்க வைத்தேன்.
பின்னர் 11-ந்தேதி மீண்டும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே அவர் ஊரை கூட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியில் ஓடினார். இதனால் நான் அவரை கையால் அடித்தேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். பின்னர் நான் எனது காலால் அவருடைய கழுத்தில் மிதித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். பிறகு அவருடைய உடலை சாக்கு மூட்டைக்குள் வைத்து தைத்து, இரவில் எனது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்துக்கொண்டு எங்கள் பகுதியில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு வந்துவிட்டேன் என கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் யோகநாதனை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu