கோபிசெட்டிபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது
X

கைது செய்யப்பட்ட (அண்ணன்) சஞ்சீவி காந்தி , சொத்து தகராறில் இறந்து போன (தம்பி) நாகராஜ் 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணாநகரில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பி இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது எதிர்பாராதவிதமாக தம்பி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் அண்ணன் சஞ்சீவ் காந்தி என்பவரை பங்களாப்புதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணாநகரை சேர்ந்த தம்பதி ராமசாமி - ஈஸ்வரி. இவருக்கு சஞ்சீவ்காந்தி(43) மற்றும் நாகராஜ் (38) என்ற திருமணமான இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராமசாமியின் மகன்கள் இருவரும் தங்களது தொழில் காரணமாக வெளியூர்களில் வசித்து வந்தனர்.ராமசாமியும் அவரது மனைவியும் பூர்வீக வீட்டில் தனியே வசித்து வந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமசாமியின் இளைய மகன் நாகராஜ் வெளியூரிலிருந்து தனது தந்தை வீட்டிற்கே வந்து சொந்தமாக ஆம்னி வேன் வாடகைக்கு ஓட்டும் தொழில் செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் ராமசாமியின் மூத்த மகன் சஞ்சீவ் காந்தி தனது தம்பி நாகராஜ் தனது தந்தையின் பூர்வீக வீட்டில் குடியிருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவரிடம் அடிக்கடி சண்டையிட்டும் அவரது தந்தையிடம் தனக்கு வீடு கட்ட இடம் தர வேண்டுமென்றும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து வெளியூரில் குடியிருந்த சஞ்சீவ் காந்தி வழக்கம்போல தனது தந்தை வீட்டிற்கு வந்து அங்கிருந்த தனது தம்பியிடம் நீ இந்த வீட்டில் இருக்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அண்ணன் தம்பி இருவருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருவரும் சண்டையிட்டபடியே வீட்டிற்கு வெளியே இருந்து ரோட்டிற்கு வந்து கட்டிப்பிடித்து உருண்டு ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.

அப்போது தம்பி நாகராஜ் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அண்ணன் தம்பி சண்டையிட்டுக்கொள்ளும் தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு ராமசாமியின் இளைய மகன் நாகராஜ் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோபி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற போது அங்குள்ள மருத்துவர்கள் நாகராஜ் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அண்ணன் சஞ்சீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன நாகராஜுக்கு இதய நோய் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும், தகராறில் மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.சொத்து தகராறில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!