மீண்டும் தாளவாடியை நெருங்கிய கருப்பன் யானை: மலைவாழ் மக்கள் அச்சம்
பைல் படம்.
Erode news today- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் கருப்பன் யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு, தென்னை, ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. மேலும், இரவு நேர காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, கருப்பன் யானையைப் பிடிக்க கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். துப்பாக்கி மூலம் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் அது மயக்கமடையவில்லை. மாறாக வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த மார்ச் மாதம் கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டன. ஆனால் அப்போதும் யானை மயங்காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது.
இந்நிலையில், "கருப்பன் யானை" என்ற பெயர் மாற்றப்பட்டு "STR JTM 1" ( சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீர்கள்ளி, தாளவாடி ஆண் 1) என்று பெயர் மாற்றப்பட்டு, கருப்பன் யானையைப் பிடிப்பதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து,வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மகராஜன்புரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வந்த நிலையில், கடந்த 17-ந் தேதி அதிகாலை ஐந்து மணி அளவில் ஓசூர் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் யானைக்கு 7-வது முறையாக மயக்க ஊசி செலுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட கருப்பன் யானை, அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்று பகுதியில் விடப்பட்டது. மயங்கிய நிலையில் யானை இருந்ததால் அதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கருப்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த கருப்பன் யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. வனப்பகுதியில் உள்ள தீவனத்தை தின்றது. பாலாற்றில் தண்ணீர் குடித்தது. 150 கிலோ மீட்டர் எனினும் கருப்பன் யானை, மற்ற யானைகளுடன் சேராமல் தனியாகவே காட்டுக்குள் சுற்றியது.
இந்தநிலையில் பாலாறு வழியாக கருப்பன் யானை வேலாம்பட்டி, குட்டையூர், மாக்கம்பாளையம் வரை 150 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றது. கருப்பன் யானையை அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து உள்ளனர். மேலும் தாளவாடி பகுதியை சேர்ந்த சிலரும் கருப்பன் யானை பயணித்ததாக கூறப்படும் கிராமங்களுக்கு சென்றனர். அவர்களும் அந்த யானையை பார்த்துவிட்டு அது கருப்பன் யானை தான் என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் கருப்பன் யானை எந்த இடத்திலும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் கருப்பன் யானை ஆசனூர் வழியாக தாளவாடி வனப்பகுதியை சென்றடையும் என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். அச்சம் இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், 'தாளவாடி வனப்பகுதி குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது. ஆனால் பர்கூர் வனப்பகுதி சற்று வெப்பம் நிறைந்த பகுதி ஆகும். எனவே சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு கருப்பன் யானை தாளவாடிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம், ' என்றனர். இதற்கிடையே கருப்பன் யானை மீண்டும் தாளவாடிக்கு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu