2024ல் 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சி - ஈரோட்டில் அண்ணாமலை பேச்சு
ஈரோட்டில் நடைபெற்ற பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை.
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி முன்னாள் ஊடக பிரிவு சார்பில், பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடந்தது.
கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு, தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்ப வாரிசுகளுக்கு ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார். நரிக்குறவ சமுதாய மக்களையும் அவர் மேடையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
கடந்த, 2014ல் 283 எம்பிக்களுடன் மோடி தலைமையில் அமைந்த ஆட்சி, 2019ல் 303 எம்பிக்களுடன் முழு பலத்துடன் தொடர்கிறது. ஒன்பதாண்டு கால ஆட்சியில் இந்தியாவிலும், சர்வதேச அளவில் இந்தியா மீதும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பார்க்க வேண்டும். மக்கள் கண்டுள்ள வளர்ச்சியால், 2024ல் நமது சித்தாந்த அடிப்படையில், 400 எம்பிக்களுக்கு மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறை யாக பிரதமராக மோடி தலைமையில் ஆட்சி அமையும். அதில் தமிழகத்தில், 39 எம்பிக்களில் பெரும்பான்மை எம்பிக்கள் வெற்றி பெற்று, கேபினட் அமைச்சர்களாக இடம் பெறுவர்.
இந்தியாவின் வளர்ச்சி, மோடியின் அணுகுமுறையை பார்க்கும் உலக நாடுகள், மோடியை விலைக்கு வாங்க முடியாது. எனவே இந்தியாவுக்கு உரிய மரியாதையை கொடுப்போம் என்ற நிலைப் பாட்டுக்கு வந்துள்ளதை காண முடிகிறது. காஷ்மீரில் சிவில் சட்டம் கொண்டு வந்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். இதனால் கடந்தாண்டு, 1.80 கோடி பேர், காஷ்மீரை சாராதவர்கள், சுற்றுலாவுக்காக வந்தனர். இந்த சூழலில்தான், பொது சிவில் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த முயன்றுள்ளார். இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வந்தபோது அம்பேத்கர் பேசிய உரையில், பொது சிவில் சட்டத்தை குறிப்பிட்டுள்ளார். அதை, 1 லட்சம் பிரதி எடுத்து ஸ்டாலினிடம் கொடுக்க உள்ளோம்.
செந்தில்பாலாஜி போன்ற ஊழல்வாதிகள் கைதானதும், முதல்வரும், அவரது மகனும் காப்பாற்ற அவரை அமைச்சராக முயல்கின்றனர். பார்க்காத ஒரே பி.டி.ஆர்.பழனிவேல் மட்டுமே உள்ளார். செந்தில்பாலாஜியால் ஆண்டுக்கு, 44,000 கோடி ரூபாய் நேரடியாகவும், 60,000 கோடி ரூபாய் மறைமுகமாகவும் வருவாய் கிடைத்தது. அதை இழக்க விரும்பாத ஸ்டாலின், அவரை காப்பாற்றுவதற்காக, இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர கவர்னருக்கு கடிதம் அனுப்புகிறார்.அவரது அமைச்சரவையில் சிவசங்கர், பொன்முடி, நேரு, சேகர்பாபு, மகேஷ் என ஊழல் வாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவை விரைவில் வெளிவரும். 2024 தேர்தலிலும் மோடி தலைமையிலான ஆட்சி, 400 எம்பிக்களுடன் அமையும் வகையில் பணி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.க
கூட்டத்தில் மாவட்ட தலைவர் வேதானந்தம், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மாவட்ட பொது செயலாளர் செந்தில், முன்னாள் எம்பி சவுந்தரம், மாநில பொது செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu