ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்த யானை
கரும்பை சுவைக்கும் யானை.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் தீவனத்தை தேடி அடிக்கடி இந்த சாலையை கடக்கின்றன.
தற்போது தாளவாடி மற்றும் கர்நாடகத்தில் விளையும் கரும்புகள் லாரிகள் மூலம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லாரிகளில் இருந்து டிரைவர்கள் யானைகள் தின்பதற்காக கரும்பு கட்டுகளை தூக்கி ரோட்டு ஓரம் வீசுவார்கள்.
ரோட்டோரம் சுற்றும் யானைகள் இதுபோல் வீசப்படும் கரும்புகளை ருசி பார்த்து பழகிவிட்டன. அதனால் கடந்த சில நாட்களாக நிற்காமல் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து, கரும்பு கட்டுகளை கீழே இழுத்துப்போட்டு ருசிக்கின்றன.
ஆசனூர்-காரப்பள்ளம் வனப்பகுதியில் அந்த வழியாக வந்த கரும்பு லாரியை யானை மறித்தது. உடனே டிரைவர் பயந்துபோய் லாரியை நிறுத்தினார். இதையடுத்து தாய் யானை லாரியில் ஏற்றப்பட்டு இருந்த கரும்புகளை பிடுங்கி கிழே போட்டது. பிறகு கரும்பை குட்டி யானைக்கு கொடுத்து, தானும் சுவைத்தது.இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திக் கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu