பவானிசாகர் அணை பூங்காவிற்குள் நுழைந்த காட்டு யானை: கர்ப்பிணி படுகாயம்
பைல் படம்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டு யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் நடமாடி வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒற்றை காட்டு யானை ஒன்று பூங்காவிற்குள் முகாமிட்டது. திடீரென காட்டு யானை பூங்காவில் நடமாடுவதை கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து யானை பூங்காவை விட்டு வெளியேற முயன்றது. அப்போது பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது.
மேலும், பூங்காவின் இரும்பினால் ஆன நுழைவுவாயில் கேட்டை சேதப்படுத்தியபடி தார் சாலைக்கு வந்தது. அந்த சாலையில் ஒய்யாரமாக நடை போட்டது. அந்த வேளையில் புங்கார் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆனந்தி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் இருவரும் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். காட்டு யானை ஹாயாக நடந்து வருவது கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.
உடனே கர்ப்பிணி ஆனந்தி அச்சமடைந்து பயத்தில் ஓட ஆரம்பித்தார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து காயம் அடைந்தார். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டுயானை பின்னர் அப்பகுதியில் உள்ள முட்புதர் காட்டிற்கு சென்று மறைந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், கீழே விழுந்து காயம் அடைந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் தொடர்ந்து இதேபோல் காட்டு யானைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகள் வலம் வந்து கொண்டிருபப்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu