தாளவாடி தலமலை-பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

தாளவாடி தலமலை-பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு
X
தாளவாடி தலமலை மற்றும் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 12 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு தொடர்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வனக்குட்டைகள் நிரம்பி வழிகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தலமலை வனப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தலமலை வனச்சாலையில் ராமரணை, காளிதிம்பம் ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு ரோட்டில் சாய்ந்தன.

இதனால் ராமரணை, காளிதிம்பம், இட்டரை, தடசலட்டி, மாவநத்தம், பெஜலட்டி போன்ற மலைக்கிராமங்களுக்கு எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வழக்கமாக ராமரணை, காளிதிம்பம், இட்டரை, தடசலட்டி, மாவநத்தம், பெஜலட்டி மலை கிராமங்களுக்கு 2 அரசு பஸ்கள் மட்டுமே சென்று வரும். மண் சரிவு காரணமாக இந்த 2 பஸ்களும் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகளை பெற்றோர் மண் சரிந்த பாதையில் சிரமப்பட்டு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார்கள். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12 மணியளவில் வனத்துறையினர் அங்கு வந்து மரங்களையும், சரிந்து கிடந்த மண் குவியலையும் அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. மண் சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்று அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். பொக்லைன் எந்திரம் மூலம் ரோட்டில் கிடந்த ராட்சத பாறைகள் அகற்றப்பட்டன. முறிந்து விழுந்த மரங்களை பணியாளர்கள் அறுத்து வெட்டி ரோட்டு ஓரத்துக்கு கொண்டு சென்றார்கள்.

நேற்று காலையில் இருந்து சுமார் 12 மணி நேரத்துக்கு பிறகே பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!