அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை: கண்ணாடியை உடைத்து சேதம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இங்கு தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் யானைகள் சுற்றி வருகின்றன. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பஸ் மைசூரு சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது ரோட்டில் குட்டியுடன் யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. யானையை பார்த்ததும் டிரைவர் அச்சமடைந்து பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்தினார். பயணிகள் உள்பட யாரும் பஸ்சை விட்டு கீழே இறங்கவில்லை. உடனே குட்டியுடன் யானை பஸ் அருகே சென்று நின்றது. பின்னர் டிரைவர் இருக்கை அருகே துதிக்கையால் மேலும் கீழும் தடவியபடி கரும்புகள் இருக்கிறதா? என்று தேடி பார்த்தது. கரும்புகள் இல்லாததால் டிரைவர் இருக்கை அருகே பொருத்தப்பட்ட பக்கவாட்டு கண்ணாடியை யானை துதிக்கையால் உடைத்து சேதப்படுத்தியது. அதன்பின்னர் சிறிதுநேரம் யானை பஸ் முன்பே நின்றிருந்தது. பின்னர் அங்கிருந்து குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் தான் பஸ் அங்கிருந்து புறப்பட்டு் சென்றது. இதனை பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். கரும்பு லாரியை வழிமறித்த யானைகள் தற்போது அனைத்து வாகனங்களையும் மறித்து வருவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu