3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி
X

தமிழினியா.

கணவர் இறந்த வேதனையில் 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவருடைய மனைவி மாலினி (வயது 29). இவர்களுடைய மகள் தமிழினியா (வயது 3). பெயிண்டராக பணியாற்றி வந்த ரமேஷ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மாலினி தன் மகள் தமிழினியாவுடன் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையத்தில் உள்ள தன் தங்கை ரேணுகா வீட்டில் வசித்து வந்தார். கணவர் ரமேஷ் நினைவாகவே மாலினி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்வேன் என மாலினி அடிக்கடி ரேணுகா மற்றும் உறவினர்களிடம் கூறி வந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலினிக்கு திருமண நாள். இதனால் தன் கணவர் வாழ்ந்த இலங்கை அகதிகள் முகாம் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக ரேணுகாவிடம் கூறிவிட்டு மாலினி சென்று உள்ளார். அப்போது தன் மகள் தமிழினியாவையும் அழைத்து சென்றவர் வாங்கி வைத்த குளிர்பானத்தில் சாணிப்பவுடரை கலந்தார். பின்னர் அதை மகளுக்கு கொடுத்து தானும் குடித்தார்.

இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மாலினி மற்றும் தமிழினியாவை மீட்டனர். பின்னர் மாலினியை சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும், தமிழினியாவை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தமிழினியா கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழினியா பரிதாபமாக இறந்தார். மாலினி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!