ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தல்: போலீசாக நடித்து கைவரிசை

ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தல்: போலீசாக நடித்து கைவரிசை
X

மாதிரி படம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே, ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளரை, காரில் கடத்தி சென்ற மர்மநபர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வண்டிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சுகன்யா (28). இவர்கள் குடும்பத்துடன் வண்டிபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், சுரேஷ் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டு முன்பு ஒரு கார் வந்து நின்றது. அதில் 6 பேர் இருந்தனர். காரில் இருந்து 2 பேர் மட்டும் இறங்கி சுரேசின் வீட்டுக்குள் சென்றனர். அவர்களுக்கு சுமார் 30 முதல் 35 வயது வரை இருக்கும்.

பின்னர், அவர்கள் சுரேசிடம், தாங்கள் போலீசார் எனவும், விசாரணைக்காக நீங்கள் போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்றும் கூறினார்கள். இதனை நம்பிய அவர், காரில் ஏறினார். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டது. இரவு 11 மணி அளவில், சுகன்யாவின் செல்போனில் மர்மநபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள், உன் கணவரை கடத்தி சென்றுவிட்டோம். ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் அவரை விடுவோம். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, இதுபற்றி உடனே புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரை கடத்திச் சென்ற மர்மநபர்களை பிடிக்க, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், புஞ்சைபுளியம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) மகேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், லாரி உரிமையாளர் சுரேசை கண்டுபிடித்து மீட்க புலன் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அவரை கடத்திச்சென்ற மர்மநபர்கள் 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். லாரி உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா