சத்தியமங்கலத்தில் 25 லட்சம் மதிப்பிலான கடத்தல் குட்கா சிக்கியது, 2 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே 8 பேர் அடங்கிய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பருத்திக்கொட்டை மூட்டைகளின் நடுவே குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் வேனை ஓட்டி வந்த நபர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் முகமது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலம் கோழி பாளையத்திலிருந்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தி செல்வதும் தெரியவந்தது.
உடனடியாக அவரிடமிருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கடத்தி வந்த இருவரையும் சத்தியமங்கலம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்த சத்தியமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu