சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு
X

சிறுத்தை கடித்து பலியான ஆடுகள்.

பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார்.

சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதி கெம்பநாயக்கன்பாளையம் கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. மேலும் இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த பகுதியில் தன்னுடைய ஆடுகளை மேய்த்து விட்டு நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தார். இதனையடுத்து நேற்று காலை ரங்கசாமி வந்து பார்த்தபோது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 3 ஆடுகள் படுகாயத்துடன் கிடந்தன.

உடனடியாக அவர் இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனச்சரகர் பெர்னாட் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தார். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என தெரியவந்தது. மேலும் ரங்கசாமி வீட்டுக்கு சென்ற பின்னர் நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறிவிட்டு வனப்பகுதிக்கு சென்றதையும் கண்டுபிடித்தனர். சிறுத்தை தாக்கி இறந்த ஆடுகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!