இரண்டு நாளில் கிடுகிடுவென 7 அடி உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்

இரண்டு நாளில் கிடுகிடுவென  7 அடி   உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் இரண்டு நாளில் 7 அடி உயர்ந்துள்ளது

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் இரண்டு நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அந்த உபரி நீரானது பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,399 கன அடியாகவும், நேற்று (17ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,661 கன அடியாகவும் இருந்த நிலையில், இன்று (18ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19,261 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், நேற்று முன்தினம் 70.93 அடியாகவும், நேற்று காலை 74.73 அடியாகவும் இருந்த அணை நீர்மட்டம், இன்று காலை 77.81 அடியாக உயர்ந்து, இரண்டு நாளில் அணை நீர்மட்டம் 6.88 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 11.34 டிஎம்சியிலிருந்து 14.55 டிஎம்சியாக அதிகரித்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 600 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!