ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8.82 லட்சம் பேர்
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் உலை வேகம் எடுத்த போது பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்தது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப வீடுகளிலோ, மருத்துவமனைகளிலோ வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நோய் தொற்றிலிருந்து மக்கள் விரைவாக குணம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 9500 முதல் 10 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவிர ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் தற்போது தினமும் 1500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதைப்போல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தற்போது மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள் அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu