கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தம்: தையல்தொழிலாளர்கள் அறிவிப்பு

கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தம்: தையல்தொழிலாளர்கள் அறிவிப்பு
X

பைல் படம்

கடந்த 5 வருடமாக விலை ஏற்றம், தையல் மிஷின் பராமரிப்பு செலவு அதிகரிப்பால் சிரமப்படுவதை கவனத்தில் கொள்ளவில்லை என புகார்

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பை தைக்கும் தொழிலில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடுகளிலேயே தையல் இயந்திரங்கள் மூலம் கூலிக்கு பைகள் தைத்து குடும்ப பொருளாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களுக்கு, கடந்த 2016-ம் வருடம் கூலி உயர்வு, பைக்கு 25 காசுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடமாக நரம்பு விலை ஏற்றம், தையல் மிஷின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு, வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பொதுவான விலை உயர்வு காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்ட பை தைக்கும் பெண் தொழிலாளர்களுக்கு சுத்துப்பட்டி பை ஒன்றுக்கு ரூ. 1 கூலி உயர்வும், சைடு பட்டி பை ஒன்றுக்கு 75 பைசா கூலி உயர்வும், சாதா பை ஒன்றுக்கு 30 பைசா கூலி உயர்வும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, பவானி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்ட பை தைக்கும் பெண் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் குருப்பநாயக்கன்பாளையத்தில் பவானி வட்டார கட்ட பை தைக்கும் தையல் தொழிலாளர் சங்கம், இடது தொழிற்சங்க மையம் சார்பில் நேற்று நடைபெற்றது.

சங்கச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சிவகாமி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் சிங்காரவேல், நாச்சிமுத்து மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பவானி வட்டாரத்தில் பை தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!