தினமும் ரூ.150 கோடி துணி உற்பத்தி நிறுத்தம்: குமுறும் விசைத்தறி உற்பத்தியாளர்கள்!
தமிழகத்தில் இயங்கி வரும் 8 லட்சம் விசைத்தறியில், நேரடியாக பத்து லட்சம் பேரும், மறைமுகமாக பத்து லட்சம் பேரும் உற்பத்தி பணியில் ஈடுபட்டுகின்றனர். இங்கு தினமும், 150 கோடி ரூபாய் மதிப்பில், 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும். வாரத்துக்கு சுமார் 45 கோடி மீட்டர் துணி உற்பத்தியாவதால் ஒரு தொழிலாளிக்கு வாரம் சுமார் 3,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலையொட்டி, வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நிலையில் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால், விசைத்தறி தொழில் முற்றிலும் பாதித்துள்ளது. இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கூறியதாவது:
விசைத்தறியில் தமிழகத்தில் உற்பத்தியாகும் துணிகள் டில்லி, மஹராஷ்டிரா என பல மாநிலத்துக்கு அனுப்பி பிராசசிங், டையிங், பிரின்டிங், ஆயத்த ஆடை மாற்றம் செய்து பல இடங்களுக்கு விற்பனைக்கு செல்லும். கொரோனா தாக்கம் காரணமாக இம்முறை வடமாநிலங்களில் கடந்த சில மாதத்துக்கு முன் முடக்கம் அறிவித்தபோது, தமிழகத்தில் முடக்கம் இன்றி விசைத்தறிகள் செயல்பட்டன.
ஆனால், துணிகளை வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கியது. அதனால் விலையும் சரிந்தது. தற்போது தமிழகத்தில் அறிவித்துள்ள பொது முடக்கத்தால், துணி உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு, 2 மாதமாக 30 சதவீத துணிகள் கூட உற்பத்தியாகவில்லை. தற்போதைய பாதிப்பை ஈடுகட்டுவதும், தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலையை வழங்குவதும் மிகவும் சிரமமானது.
முடக்கம் நீங்கி விசைத்தறி உற்பத்தி துவங்கினாலும், பாதி அளவே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். எனவே அவர்களின் வாழ்வாதாரம் காக்க முழு உற்பத்தியை துவங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடாமல் தேசிய அளவில் ஓரே அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu