கரும்பு பாரத்துடன் 55 அடி ஆழ கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய லாரி
கிணற்றுக்குள் விழுந்த லாரி
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பெரியபுலியூர், தயிர்பாளையம் பிரிவு பகுதியில் விவசாயத் தோட்டத்தில் வெட்டப்பட்ட சுமார் 15 டன் கரும்பினை ஏற்றிக் கொண்டு, நேற்று மாலை லாரி ஒன்று, கவுந்தப்பாடி சாலைக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, தோட்டத்தில் உள்ள தரைமட்டக் கிணற்றின் அருகாமையில் உள்ள பாதையில் லாரி சென்றபோது, எதிர்பாராமல் கிணற்றின் பக்கவாட்டில் மண்சரிந்து விழுந்தது.
இதனால், லாரி நிலைதடுமாறி பக்கவாட்டில் கிணற்றுக்குள் சாய்ந்தது. இதைக் கண்ட லாரி ஓட்டுநர் பரமசிவம், சுதாரித்துக் கொண்டு லாரியிலிருந்து குதித்து உயிர் தப்பினார். சுமார் 55 அடி ஆழமுள்ள கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்ததால் தண்ணீருக்குள் லாரி கரும்பு பாரத்துடன் மூழ்கியது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பவானி தீயணைப்புப் படையினர், லாரியை மீட்கும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். முதல்கட்டமாக கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, லாரியை ராட்சத மீட்பு வாகனங்களைக் கொண்டு வெளியே கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu