கீழ்பவானி பாசனத்திட்ட பிரச்சனை : விவசாயிகள் சங்கங்கள் வேண்டுகோள்
பவானி சாகர் அணை.
அறச்சலூர் செல்வம், ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை விவசாயி. கீழ்பவானி பாசனத்திட்டம் குறித்த பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விவசாயிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறார். அவர் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை வளம் செய்யும் கீழ்பவானி பாசனத் திட்டத்தை சீரமைப்பதில் உரிமை உடைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கும், ஆயக்கட்டில் இல்லாத விவசாயிகள் மற்றும் தண்ணீர் வணிகர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
நீண்டகால பிரச்சனை :
இந்தப் பிரச்சனை மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அப்போதைய மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். சுப்புலட்சுமி ஜெகதீசன் 22.06.2009ல் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்அப்போதைய முதல்வர், 11.09.2009 அன்று மூலம் காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவரான மோகனகிருஷ்ணன் தலைமையில் வல்லுனர் குழு அமைத்தார். இதற்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுவை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைத்தார்.
இவ்விரு குழுக்களும் கீழ்பவானி பாசனக் கட்டமைப்பை சீரமைக்க லைனிங் திட்டத்தைப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் கால்வாயையும் பாசனக் கட்டுமானங்களையும் நவீனப்படுத்த 19-7-2010ல் ரூ.610 கோடி ஒதுக்கி ஆணை பிறப்பித்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக பணி நின்று போனது. நான்கு ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பின் ஜெயலலிதா தலைமையிலான அரசு திட்டத்தை சற்றே மாற்றி அமைத்து செய்ய அரசாணை வெளியிட்டது.
தடுக்க முயற்சி :
இந்த காலகட்டத்தில் தான் ஆயக்கட்டில் இல்லாத விவசாயிகள், தண்ணீர் வணிகர்கள், ஆயக்கட்டு மற்றும் ஆயக்கட்டு பகுதிகளில் இல்லாத கல்லூரிகள் இதைத் தடுக்க முயன்றனர். இன்றும் முயன்று வருகின்றனர். இவர்களோடு அதிமுக, திமுக, பாஜ.க, காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஆயக்கட்டு தண்ணீரைக் கொண்டு சுய ஆதாயம் பெறும் விவசாயிகளும் இணைந்து கொண்டு எதிர்த்தனர்.
தி.மு.கவோ ஏதாவது ஒரு திட்ட வடிவில் இந்தத் திட்டம் நிறைவேறுவது நல்லது என்று எவ்வித பிரச்சனையையும் உருவாக்கவில்லை. திட்டத்தை தொடங்கிய காலம் தேர்தல் காலமாக இருந்ததால் அப்போதைய அரசு திட்டத்தை கிடப்பில் போடப்பட்டது.
நபார்டு வங்கித் திட்டம் :
பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இந்தத் திட்டத்தை நபார்டு வங்கியின் கடன் மூலம் செய்யும் திட்டமாக மாற்றி அமைத்து 9-11-2020 அன்று அரசாணை பிறப்பித்தது. இந்தத் திட்டத்தை தான் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் தொடங்கி வைத்தாரே ஒழிய மத்திய அரசு எவ்வித நிதியையும் அளிக்கவில்லை.
இந்த முறையும் சீரமைப்புத் திட்டம் தேர்தலை ஒட்டிய காலத்தில் அமைந்ததால் மீண்டும் ஆயக்கட்டில் இல்லாதவர்களும், தண்ணீர் வணிகர்களும் பிறரும் எதிர்த்தார்கள். தேர்தல் காலத்தில் இது குறித்து தி.மு.க தலைவரிடம் கோரிக்கை வைத்த போது விவசாயிகளைக் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்தும் என்று உறுதி கொடுத்தார்.
பேச்சுவார்த்தை :
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் மாவட்ட அமைச்சர் திட்டம் வேண்டாம் என்பவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டமானதால் அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று எதிர் தரப்பு வலியுறுத்தியது. முன்னரே வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதால் அரசு ஆயக்கட்டு விவசாயிகளிடம் கலந்தாலோசனை நடத்தவில்லை. இப்படி ஒரு தரப்போடு மட்டும் பேச்சு வார்த்தை நடத்துவது சரியல்ல. ஆயக்கட்டு விவசாயிகளிடமும் பேச வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
உண்மைத்தன்மை அறியாத அறிக்கைகள் :
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி செயலர் பிரச்சனையின் உண்மை தன்மை அறியாமலும், முழு விவரங்கள் அறியாமலும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். முழு விவரங்கள் இல்லாமல் அளிக்கப்பட்ட குறை விவரங்களைக் கொண்டு அறிக்கைகள் வெளியிடுவது அவரவர் அரசியலுக்கு உதவுமே தவிர பிரச்சனைகளைத் தீர்க்கவோ, பிளவுபட்டு நிற்கும் விவசாய சமூகத்தை ஒன்றுபடுத்தவோ உதவாது.
வேண்டுவன..:
தமிழக விவசாயிகளுக்குள் ஆயரமாயிரம் முரண்பாடுகள் இருப்பினும் சமூகம் பிளவு படுவதை விரும்பாத விவசாய சங்கங்களே தமிழகத்தில் உள்ளன. முதலில் பிரச்சனையை புரிந்து கொள்ளுங்கள். காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் விரிவான ஆய்வு அறிக்கையைப் படித்திடுங்கள்.
இருதரப்பிற்கும் அவரவர்களுக்கான தேவை உள்ளது. அவரவர் தேவையை சமூகத்தில் பிளவு வராத வகையில் பூர்த்தி செய்வது குறித்து விவசாயிகளே முடிவு செய்வோம். அரசியல் காட்சிகள் இந்த பிரச்னையில் ஒதுங்கி நில்லுங்கள் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழக அரசு கீழ்பவானி பாசனத் திட்டத்தில் உள்ள பிரச்சனையையும், எதிர்ப்பின் பின்னணியையும் நன்கு புரிந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறோம். பேச்ச வார்த்தை நடைமுறைகளில் எங்களுக்கு சில வருத்தங்கள் இருந்தாலும் அவற்றை எங்களுக்குத் துரோகம் செய்வதாக நாங்கள் நம்பவில்லை. மேலும் பல பத்தாண்டுகளாக இயங்கும் முறை நீர் பாசன சபைகள் எக்காலத்திலும், திமுக மட்டுமல்ல, எந்தவொரு கட்சியின் ஆதிக்கத்திலும் இருந்ததில்லை.
ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் வேண்டுவதெல்லாம் உங்களால் இயலுமானால் இரு தரப்பு தண்ணீர் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். அதற்கான தீர்வுகளையும் வழிமுறைகளையும் தெரிவித்து வலியுறுத்துங்கள். ஆயக்கட்டு விவசாயிகளின் தண்ணீரைக் கேட்பது சரியல்ல என்பதைப் புரிய வைப்பதுடன் அவர்களுடைய நியாயமான தண்ணீர் தேவைகளை தீர்ப்பதற்கான வழி முறைகளையும் அறிய முற்படுங்கள்.
இது மிகுந்த வரவேற்பிற்குரியதாக இருக்கும். மேலும் பிரச்சனையை சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டு உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். இயலுமாயின் சுமூகமான தீர்வுக்காக உடன் வாருங்கள், இல்லையெனில் தயவு செய்து சற்றே தள்ளி நில்லுங்கள் என்று கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம், கீழ்பவானி முறைநீர் பாசன சபைகள் கூட்டமைப்பு, தமிழக இயற்கை விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu