பவானி அருகே உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி.
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது உரம் உற்பத்தி செய்யும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, மாநில அரசு விதைப்பண்ணையில் தூயமல்லி நாற்றுகள் நடவு செய்யும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், குருப்பநாயக்கன்பாளையத்தில் உயிர் உர உற்பத்தி மையம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் ஆண்டுக்கு 250 டன் உற்பத்தி செய்து பல மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு உயிர் உர உற்பத்தி மையத்தை மேம்படுத்தி திரவ உயிர் உர உற்பத்தி மையமாக மாற்றப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா என 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
புதிய தொழில்நுட்ப எந்திரம் மூலம் நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பிரித்து செறிவூட்டி ஒரு மில்லியில் ஒரு கோடி கூட்டமைப்பு உருவாக்கும் அலகு அளவிலான நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் என்ற அளவில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தானியங்கி எந்திரம் மூலம் பாட்டில்களில் நிரப்பப்படுகிறது.
பவானியில் செயல்பட்டு வரும் மாநில அரசு விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி 4 ஏக்கர் பரப்பளவிலும், அறுபதாம் குறுவை 3 ஏக்கர் பரப்பளவிலும் விதை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு நாற்றங்கால் அமைக்கப்பட்டு உள்ளது. தூயமல்லி நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) ஆர்.அசோக், பவானி வேளாண்மை உதவி இயக்குநர் குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu