பவானி வட்டார பகுதியில் கனமழை: நிரம்பிய நீர் நிலைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள்

பவானி வட்டார பகுதியில் கனமழை:  நிரம்பிய நீர் நிலைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள்
X

பவானி முதல் அந்தியூர் செல்லும் சாலையில் வெள்ளம் போல் செல்லும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு 

கனமழை காரணமாக தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் உள்பட 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் உட்பட 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. நேற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் பகுதியில் ஒரே நாளில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியை நெருங்கிவிட்டது. இதேபோல் பவானி, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், பவானிசாகர், ஈரோடு, சத்தியமங்கலம், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை, எலந்தகுட்டைமேடு, நம்பியூர், தாளவாடி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.



தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பின்னர் மழை தூரி கொண்டே இருந்தது. பலத்த மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. 10-க்கும் மேட்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலை மற்றும் சூசைபுரத்திலிருந்து பீம்ராஜ் நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலங்களை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பவானி சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.இதனால் தொட்டிபாளையம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம், பணங்காட்டு வீதி,தாளபையனூர்,பழைய காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.இதனால் மக்கள் நள்ளிரவு முதல் அவதியடைந்து வருகின்றனர்.தொடர்ந்து நெல்,கரும்பு,சோளம் ஆகிய விவசாய விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மழைநீர் பவானி முதல் அந்தியூர் செல்லும் சாலையில் வெள்ளம் போல் செல்லும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதை உணராமல் சென்ற வாகன ஓட்டி மழைநீரில் சிக்கி கொண்டது இதன் பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.



இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி வட்டாட்சியர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிராம மக்களை பள்ளியில் தங்க வைக்க வருவாய் துறையினர் அழைத்த போது கிராம மக்கள் புறக்கணித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பல வருடங்களாக மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் மழைநீர் செல்ல முறையாக வடிகால் வசதியும் மற்றும் சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீர் செல்ல வடிகால் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!